Wednesday, December 9, 2009

தேவையா? விருப்பமா? எது உங்கள் விருப்பம் அல்லது தேவை?


உள்ளங்களுக்கு தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. கடவுள் நமக்கு தேவையானதை தருவதில் தயக்கம் காட்டுவதில்லை. ஆனால் நாம் நமக்கு விருப்பமானதை கடவுள் தருவதில்லை என கட்வுளிடம் மன்றாடிக் கொண்டு இருக்கிறோம். மனதின் தேவைகளுக்கும் உடல் தேவைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் நமக்கு புலப்படுவதில்லை.

நமக்கு ஒரு வீடு வேண்டும் என்பது உடலின் தேவை. பல வீடுகள் கட்டி வாடகைக்கு விட வேண்டும் என்பது நமது உள்ளத்தின் அவா. இரண்டுக்கும் வேறபாடு உண்டல்லவா?

நமக்கு அலுவலகம் சென்று வர ஒரு வாகனம் வேண்டும் என்பது சரி. நமக்கு நமது குடும்பம் சென்று வர ஒரு வாகனம் வேண்டும் என்பது சரி. அது மிக உயர்ந்த் விலை கொண்ட வாகனமாக அமைய வாஙக வேண்டும் என்பது என்னவென்று நாம் தான் உணர வேண்டும். நாம் அமர்ந்து செல்லும் வரை தான் அது வாகனம். இறங்கி சென்றுவிட்டால் அது நிலையான ஒரு பெரிய பொருள் அவ்வளவே.

எவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி குடி புகுந்தாலும் நமக்கு அந்த வீட்டில் தேவை நாம் நிற்கும் இடம், நாம் அமரும் இடம். நாம் படுக்கும் இடம் மட்டுமே. அதை விட ஒரு சதுர அங்குலத்தை கூட நாம் அனுபவிப்பதில்லை. அப்படி இருக்க நமக்கு தேவை நான்கு மாடி வீடுகள். வீட்டில் 40 அறைகள். இவை நமது ஆசையா அல்லது தேவையா?

ஒரு சாதாரண நடுத்தட்டு குடிமகனின் மாதாந்திரத் தேவையான ஒரு தொகையை பல உயர்தட்டு மக்கள் தங்கள் குழந்தைகளின் கைச் செலவிற்கு செலவிட கொடுக்கின்றனர். அக்குழந்தைகள் பிற்காலத்தில் பணத்தின் அருமையை உணராமல் வளர்கின்றனர். இதற்கு நாம் யாரை குற்ற்ம் சொல்வது? பெற்றோரையா அல்லது குழந்தைகளையா?

பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பது நமது விருப்பம். அது நமக்கு பிடித்த படிப்பாகத் தான் இருக்க வேண்டும் எனறு நாம் நினைப்பது தவறு. ஒரு குதிரையை தண்ணீர்த் தொட்டிக்கு அழைத்துச் செல்லலாம். தண்ணீரை அந்த குதிரை தான் குடிக்க வேண்டும். அந்த பணியைப் பெறறோர் செய்தால் போதுமானது. நம்மால் படிக்க முடியாத ஒரு படிப்பை நம் பிள்ளைகளாவது படிக்கட்டும் என பெற்றோர் நினைப்பதில் தவறில்லை. அதே சமயத்தில் தன் குழந்தைகளின் விருப்பம் என்ன என்பதை உணராத பெற்றோர் தான் அதிகம்.

குழந்தைகளின் உணவு உடை வசதிகள் ஆகியவற்றில் அவர்களது விருப்பம் போல் நடந்து விட்டு படிப்பில் வற்புறுத்துவது அழகா.? குழந்தைகளை அவர்கள் வயத்துக்குரிய விளையாட்டுகளைக் கூட விளையாட விடாமல் அவர்களிடம் ஒரு இயந்த்திரத்திற்கான செயல்பாட்டை எதிர்பார்க்கும் பெற்றோர் தான் எத்தனை பேர். காலையில் பாட்டு, பகலில் உடற் பயிற்சி, மாலையில் கணிணி இரவில் வீட்டுப் பாடம் என அவர்க்ளை ஒரு ரத்தமும் சதையும் உள்ள ஒரு உயிராக நினைத்திடாமல் எத்தனை எத்தனை திணிப்புகள்.

இவை அனைத்தும் தேவையா? விருப்பமா என யாராவது எப்போதாவது நினைத்ததுண்டா? நமக்கு அந்த ஞானோதயம் வரும்பொழுது காலம் மிகக் கடந்திருக்கும். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி இருப்பார்கள். திரும்ப அவர்களே நினைத்தாலும் அந்த விளையாட்டுகளை அவர்கள் விளையாட முடியாது.

அலுவலகத்தில் நமது மேலதிகாரியை தேர்வு செய்யும் தகுதி நமக்கு இருக்கலாம். அந்த உரிமை நமக்கு கிடையாது. அவரை விட நாம் தகுதியானவர்களாய் இருக்கலாம். ஆனால் பதவி பலத்தில் அவர் நம்மை விட மேல் தான். அவருடன் மோதுவது என்பது தீயைத் தொடுவது போலத் தான். சூட்டைத் தாங்கும் தைரியம் இருந்தால் அந்த செயலில் இறங்கலாம். பின்னால் புலம்புவதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை.

எந்த ஒரு வேலையை செய்யும் போதும் ஈடுபாட்டுடனும் காதலுடனும் செய்தால் நமக்கு வெறுப்பு வரும் வாய்ப்பு மிகவும் குறைவு தான். பதவி உயர்வு, பணிமாற்றம், ஊதிய உயர்வு என நமக்கு இருக்கும் எல்லா எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் அனைவருக்கும் பொதுவானது என்பதை ஏனோ நாம் வசதியாக மறந்து விடுகிறோம்.

அதே சமயத்தில் அலுவலகத்தில் நமக்கு அளிக்கும் வசதிகளை, சலுகைகளை உபயோகிப்பதில் நாம் எந்த விதமான பாரபட்சமும் பார்ப்பதில்லை. அதை நம் உரிமை என கருதுகிறோம். காலையில் அலுவலகம் வரும் பொழுது 10 நிமிடம் தாமதமாக வந்தால் டிராபிக் ஜாம் என குறை கூறுகிறோம். மாலையில் அதே காரணத்திற்காக 10 நிமிடம் விரைவாக கிளம்புகிறோம். பணியின் காரணமாக 10 நிமிடம் தாமதமானால் அலுவலகத்தை கரிக்கிறோம்.

மாத துவக்கத்தில் வரும் ஊதியம் நமது ஈடுபாட்டை நிர்ணயிக்கிறது. அதிகம் என்றால் அதை நமது தகுதிக்கிணையாக கருதுகிறோம். குறைவாக இருப்பின் அலுவலகத்தின் தகுதியை குறைத்து மதிப்பிடுகிறோம். இது சரியா? பணியாளர் அனைவருக்கும் பணிக்கு சேர்ந்த சில வருடங்களில் மேலதிகாரியாக ஆர்வம் வந்து விடுகிறது. அதற்கான தகுதி வந்து விட்டதா என்று பார்த்தல் கிடையாது.

நம் பணிக்காக மாடாக உழைக்கிறோம் என்று நினைப்பவர்கள் அதில் எவ்வளவு தூரம் உண்மை என்பதை யாரும் சொல்லாமல் தாங்களாகவே சரி பார்த்துக் கொள்ள முடியும். தினமும் தூங்குவதற்கு முன்பாக 10 நிமிடம் கண்ணை மூடி நாம் அன்று செய்த பணிகளில் எவ்வளவு அலுவலகப் பணி, எவ்வளவு சொந்த பணி. என் நிலையில் நேற்றைய நிலையில் இருந்து இன்று 10 சதவீதமாவது அதிகம் இருந்ததா? இல்லையென்றால் முன்னேற்றம் இல்லை என்று தான் அர்த்தம்.

தினமும் தூங்கி எழும் பொழுது இன்று கடந்த பொழுதை விட ஒரு சதமாவது சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கருத்தில் கொண்டு பணி புரிந்தால் நம் முன்னேற்றத்தினை க்ண் கூடாக காணமுடியும். அதை விடுத்து மற்றவர் முன்னேற்றத்தினைக் கண்டு பொறாமை கொள்தல் நல்ல மனதிற்கு அழகல்ல. இதை தினமும் கடை பிடிப்பவர்க்கு வெற்றிக் கனியைப் பறிப்பது ஒன்றும் பெரிய வித்தை அல்ல.

நம்மை ஒருவரோடு ஒருவர் பொருத்திப் பார்ப்பதால் மனம் கெடுவதோடு மட்டுமன்றி பகை கூடுவது தான் நாம் காணும் பலன். இதை நன்கு தெரிந்தும் இந்த தாழ்வு மனப்பான்மையால் தானும் தவித்து மற்றவர்களையும் தவிக்க விடுவ்ர் பலர். ஒருவருக்கு தீங்கு செய்ய நினைப்பதாலோ, செய்வதாலோ, ஒருவர் மீது கோபப் படுவதாலோ பாதிக்கப் படுவது நாம் தானே தவிர அடுத்தவர் அல்ல. அவர்களுக்கும் நமது கோபம் தெரியாமல் கூட இருக்கலாம். வீணில் ஏன் நமது ஆரோக்கியத்தை நாமே சீர் குலைத்துக் கொள்ளவேண்டும்.

மனித மனம் மிகவும் ஆழமானது. அது பல விதமான சக்திகளை உள்ளடக்கியது. சக்தியை காணவிரும்புவோர்க்கு அது சக்தியாக காட்சியளிக்கிறது. மற்றவர்க்கு சகதியாக காட்சியளிக்கிறது. ஒரு புள்ளி மாற்றத்தால் சக்தி எப்படி சகதியாக மாறுகிற்தோ ஒரு சின்ன மாற்றத்தால் மனதின் இயல்பு தன்மை எப்படு மாறுபடுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மாற்றம் ஒன்றே நிலையானது என்பதை உணரும் மாந்தர்க்கு நிலையாமை ஒன்றே உண்மை எனபது எளிதில் புலப்பட்டு விடுகிறது. இதை உணர்ந்த மனதிற்கு எதுவும் தேவையின்றி போய் விடுகிறது. ஆனால் இந்த விருப்பம் நிறைவேறுவது நம் கைகளில் தான் இருக்கிறது என்பதை நாம் உணரும் பொழுது தான் நாம் மனிதர்களாகிறோம். அதுவரை நாம் மனிதர்களாக முயற்சி மட்டுமே மேற்கொண்டு வருகிறோம்.

வாழ்வில் நாம் அனைவரும் எந்த ஒரு சூழலிலும் மூன்று வார்த்தைகளை மட்டும் நினைவில் கொண்டால் நாம் அனைவரும் நம் இயல்பான நிலைக்கு வந்துவிடுவோம். கோபம், பெருமை, கர்வம், மகிழ்ச்சி, துக்கம், இயலாமை, உறவுகள், மோதல் அனைத்து சமயங்களிலும் நாம் சொல்ல வேண்டிய மூன்று வார்த்தைகள் "இதுவும் கடந்து போகும் ". சற்று நினைத்துப் பாருங்கள். இதன் மகத்துவம் புரியும்.
இதை அனைவரும் உணரவேண்டும் என்பதே எனது ஆசை. உங்கள் விருப்பம் அதுவேயானால் அதை ஆசையாகக் கருதாமல் தேவையாகக் கருதுங்கள். அது நிச்சயம் நிறைவேறும்.

வாழ்த்துக்களுடன் உங்கள் மதுசூதனன்.

இது எனது கன்னி தமிழ் முயற்சி. தவறிருந்தால் மன்னிக்கவும். திருத்திக் கொள்வேன்.

பாஸ் மார்க் என்றால் மிகவும் மகிழ்வேன்.

பதில் அளியுங்கள். வளர்கிறேன்.

1 comment:

mani iyars said...

you are too good tamil too. simply great